தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கூட்டணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைப்பு தொடர்பான புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ரஜினிகாந்த் – சுந்தர் சி கூட்டணி, வணிக ரீதியாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருக்கும் என பலரும் நம்பினர். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்த திரைப்படத் திட்டத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதாக தகவல்கள் வெளியானது.
சுந்தர் சி திட்டத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, “இந்த படத்தை இயக்கப்போகும் புதிய இயக்குநர் யார்?” என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு லெஜண்ட் நடிகர்களும் இணைந்து தயாரிப்பு மற்றும் படைப்புத் தீர்மானங்களில் ஈடுபடுவதால், இந்தப் படத்திற்கான இயக்குநர் தேர்வு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயர் இந்த திட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டது. “கைதி”, “விக்ரம்”, “லியோ” போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ், ஆக்ஷன் ஜானரில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் என்பதால், அவரே இந்தப் படத்தை இயக்குவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பின் அந்த திட்டத்திலிருந்து லோகேஷ் வெளியேறி அதனை தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்குகின்றார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் கூறிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் அதன்போது, “கூலி பட சமயத்தில் கமல் ரஜினியை வைத்து இயக்குவது குறித்து என்னிடம் கேட்டனர். அப்போது கைதி 2 பட வேலையில் இருந்ததால் ஒன்றரை மாதம் கழித்து இருவரிடமும் தனித்தனியாக கதை சொன்னேன். இருவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களில் நடித்ததால் லைட் ஹார்ட் படம் ஒன்றினை அவர்கள் எதிர்பார்த்தார்கள். எனக்கு லைட் ஹார்ட் படம் ஜானர் வராது. அதனால் வெளியே வந்துவிட்டேன்.” என்று கூறியிருந்தார்.
Listen News!