நடிகரும், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவருமான விஜய் நடித்துள்ள இறுதி திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தொடர்பான தணிக்கை சான்று விவகாரம் தற்போது சட்ட ரீதியான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் நிறைவடைந்ததை தொடர்ந்து, படக்குழு சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் (CBFC) தணிக்கை சான்று வழங்க கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, படத்தை பார்வையிட்ட தணிக்கை வாரிய குழுவினர், படத்தில் மதம் தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டு, இந்த திரைப்படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என பரிந்துரை செய்தனர்.
இந்த முடிவு படத் தயாரிப்பு நிறுவனத்திடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கை சட்டப்படி சரியானதல்ல என்றும், தேவையற்று தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கை வாரியம் எடுத்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

நீதிபதி தனது உத்தரவில், “ஒரு திரைப்படத்தை பார்த்து முடிவெடுத்த தணிக்கை வாரிய குழு, அதை மறுஆய்வு பரிசீலனைக்கு அனுப்புவது சட்டபூர்வமாக செல்லாது.” எனக் குறிப்பிட்டார். இந்த உத்தரவு, விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், உடனடியாக மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தற்காலிக தடை பெற்ற தணிக்கை வாரியம், வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் எடுத்துச் சென்றது.
இருதரப்பு வாதங்களையும் விரிவாக கேட்ட நீதிபதிகள், கடந்த 20-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மற்றும் தணிக்கை சான்று விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும், திரையுலகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Listen News!