தமிழ் சினிமாவில் மாடலிங் துறையிலிருந்து நடிகையாக அறிமுகமாகி, தனது நடிப்பு மற்றும் தனித்துவமான தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரைசா வில்சன். ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மைலோ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நோவா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, ரைசா வில்சன் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்களில் அவர் அணியும் உடைகள் குறித்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, கவர்ச்சியான உடைகளை அணிவதை வைத்து நடிகைகளின் தனிப்பட்ட குணம் மற்றும் தரத்தை மதிப்பிடும் போக்குக்கு அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரைசா வில்சன், நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்தால் உடனடியாக விமர்சிக்கும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஒருவரின் உடையை வைத்து அவருடைய தரத்தை தீர்மானிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கவர்ச்சி என்பதற்கும் எல்லைகள் இருக்கின்றன. அந்த எல்லைகளை யாரும் மீறுவதில்லை. அது நடிகைகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், நடிகைகள் அணியும் உடைகளை மட்டும் வைத்து அவர்களை விமர்சிப்பது வருத்தமாக இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளுக்கு சென்றபோது பிகினி அணிந்திருந்தாலும் சிலர் தன்னை விமர்சிப்பதாக வேதனை தெரிவித்துள்ள ரைசா, தான் மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், மற்றவர்கள் கவர்ச்சியான உடை என்று பார்க்கும் சில ஆடைகள் தனக்கு மிகவும் இயல்பானவை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, உடைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நடிகைகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்.
Listen News!