ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் அந்நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்த அந்த வீடியோ அசத்தலாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த முன்னோட்ட வீடியோவில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ’வா வா பக்கம் வா’ என்ற பாடலை ஒரு சில நொடிகள் மட்டுமே பயன்படுத்தி இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த நோட்டீஸில் ’கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாகவும் ’வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டீசரில் இருந்து அந்த இசையை நீக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் இளையராஜா அந்த நோட்டீஸில் சுட்டி காண்பித்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இளையராஜா என்று கூறப்படும் நிலையில் ரஜினி படத்தின் தயாரிப்பாளருக்கே அவர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!