நடிகர் அஜித் குமார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி, இளைஞர்களிடத்தில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக, பலரும் அவரவர் அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என மீண்டும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்,
இன்றைக்கு சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியல் மயமாகி உள்ளார்கள். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை.
அவர்கள் அதை, அஜித்தும் விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர் என்பது போல மாற்றிவிட்டார்கள். நாம் நச்சு கலந்த சமூகமாக மாறி விட்டோம்.
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க நினைக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன். வாழ்த்தியிருக்கிறேன். எல்லோருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்தியுள்ளேன்.

எனது தந்தையின் மறைவின் போது அவரது பூத உடலை படம்பிடிக்க சில ஊடகத்தினர் அவர்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஒரு சில ஊடகத்தினர் ரசிகர்களை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடத்திலும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் எது சரி என்று பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும்.

உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக சில போலி சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அது போன்ற போலிகளால், மக்கள் மூளைச் சலவை ஆகாமல் கவனமாக இருக்க வேண்டும்.
எனது பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. சிலர் எப்போதுமே என்னை வேற்றுமொழிக்காரன் என்றே கூறி வருகிறார்கள். ஒரு நாள் வரும் அன்று இதே நபர்கள் உரத்த குரலில் என்னைத் தமிழன் என்று அழைப்பார்கள்.
நான் எப்போது எல்லாம் ரேஸ் காரில் அமர்கிறேனோ, உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உள்நோக்கமோ, திட்டமோ இல்லை. இந்த கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் எனது உயிரே போனாலும் பரவாயில்லை என அஜித் உறுதியளித்துள்ளார்.
இறுதியில் 'தமிழ்நாடே விழித்துக் கொள், இந்தியாவே விழித்துக் கொள். அன்புடன் அஜித்' என்று தனது கருத்துக்களை முடித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.இவரது இந்த பேட்டி திரையுலகிலும் சமூக ஊடகங்களிலும் பலரது கவனத்தை ஈர்த்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
Listen News!