• Jan 26 2026

‘மங்காத்தா’வால் பலத்த அடி வாங்கிய ‘திரௌபதி–2’.. மோகன் ஜி விடுத்த வேண்டுகோள்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், அந்த படத்தின் சென்சார் பிரச்சினை காரணமாக அதன் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இதன் காரணமாக, பல திரைப்படங்கள் தங்களது வெளியீட்டு தேதிகளை மாற்றிக் கொண்டு பொங்கல் போட்டியில் களமிறங்கின.

அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி–2 திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாரானது. வரலாற்று சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், முதலில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது.

பின்னர் ஜனநாயகன்  திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதைத் தொடர்ந்து, திரௌபதி–2 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளின் பேரில், மீண்டும் ஜனவரி 23ஆம் தேதியே வெளியீட்டு தினமாக நிர்ணயிக்கப்பட்டது.


அதே நாளில், நடிகர் அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தா மற்றும் விஜயின் தெறி ஆகிய படங்களும் மீண்டும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் தெறி படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், மங்காத்தா படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் அலை காரணமாக திரௌபதி–2 படம் திரையரங்குகளில் காணாமல் போனதாக கூறி, இயக்குனர் மோகன் ஜி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், இந்த படத்திற்காக தனியாக நின்று போராடியதாகவும், திரைப்பட உலகில் இருந்து ஒருவர்கூட தனக்கு ஆதரவாக பேசவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், திரௌபதி–2 ஒரு வரலாற்று அம்சம் கொண்ட படம் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த படம் விவாதிக்கப்பட வேண்டியதொரு படைப்பு என்றும் மோகன் ஜி கூறியுள்ளார். திரையரங்குகளில் திரை நேரம் கிடைக்காததால், பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் என காட்டப்பட்டதாகவும், படம் பார்த்தவர்கள் கூட உரிய விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மங்காத்தா படம் ஒரு பெரும் அலையாக மாறி, அதன் மத்தியில் திரௌபதி–2 படம் மறைந்துவிட்டதாக மோகன் ஜி தெரிவித்துள்ள இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement