விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக, சபரி முதல் ரன்னராகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாவது ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திவ்யா கணேஷின் வெற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த சீசனில், சமூக வலைதளங்களில் பிரபலமான பல போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின் மற்றும் பார்கவ் ஆகியோர் வீட்டுக்குள் சென்றனர்.
இறுதியாக நடந்த டாஸ்க்கின் போது, விஜே பார்வதி காரில் அருகில் அமர்ந்திருந்த சாண்ட்ராவை உதைத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கம்ருதீனும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். டைட்டில் வின்னராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரின் வெளியேற்றம் பெரும் திருப்பமாக அமைந்தது.

பின்னர் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேற, இறுதிப்போட்டிக்கு திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், அரோரா மற்றும் சபரி ஆகியோர் முன்னேறினர். இறுதியில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பின்போது, எந்த ஈகோவும் இன்றி சபரி விசில் அடித்து திவ்யாவின் வெற்றியை கொண்டாடியது பார்வையாளர்களிடையே பாராட்டை பெற்றது.
திவ்யா கணேஷின் வெற்றிக்கு அவரது நேர்மையான அணுகுமுறை மற்றும் தைரியமான கருத்துக்களே முக்கிய காரணம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பார்வதி–சாண்ட்ரா–கம்ருதீன் விவகாரத்தில் திவ்யா வெளிப்படையாக தனது கருத்துகளை தெரிவித்ததும், கம்ருதீனுக்கு சகோதரி போல் அறிவுரை வழங்கியதும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், திவ்யா கணேஷ், கனி, அரோரா, துஷார், வியானா உள்ளிட்ட போட்டியாளர்கள் ஒன்றாக கோயிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் பார்வதி, கம்ருதீன் காணப்படவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் நேற்றும் சந்தித்து என்ஜாய் பண்ணி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. ஆனால் அதிலும் பார்வதி, கம்ருதீன் காணப்படவில்லை.
இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் அழைக்கப்படவில்லையா, அல்லது அழைக்கப்பட்டும் வரவில்லையா இல்லை அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்களா என பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!