சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்பட்ட இன்ஃப்ளூயன்சர் சின்னு பப்பு திடீரென உயிரிழந்த சம்பவம், ஆன்லைன் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரேஷ்மா கே என்பதே சின்னு பப்புவின் இயற்பெயர். 24 வயதான இவர், துளு மொழியில் கிராமப்புற வாழ்க்கை, உள்ளூர் கலாச்சாரம் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளதோடு, இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றிருந்தார்.
இந்த நிலையில், சின்னு பப்பு திடீரென அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள காவல்துறை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, காசர்கோடு மாவட்டம் குட்லு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த சின்னு பப்பு, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகலில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முதலில் அவரைக் கண்ட அவரது சகோதரர் உடனடியாக காவல்துறைக்கும் மருத்துவ அவசர சேவைகளுக்கும் தகவல் தெரிவித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சின்னு பப்புவின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், மரணத்திற்கான உண்மையான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
Listen News!