இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரையுலகம் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளது.
இந்த முறை தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது.
மேலும், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதே படத்திற்காக தனுஷுக்கும் சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ‘அமரன்’ திரைப்படமும் தேசிய விருதுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநருக்கான விருதையும், படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படத்திற்கும் இரட்டை பெருமை கிடைத்துள்ளது. இப்படத்திற்காக அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருதையும், சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளனர்.
இதுதவிர, ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக சுரேன் ஜி சிறந்த ஒலிக்கலவை பிரிவில் சிறப்பு விருதையும், ‘ப்ளூ’ குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹர சுதன் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
தமிழ் திரையுலகம் ஒரே ஆண்டில் 10 தேசிய விருதுகளை பெற்றிருப்பது பெருமைக்குரிய சாதனை என தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் தமிழ் சினிமா மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்தியுள்ளார்.
Listen News!