• Jul 10 2026

தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு… தேசிய விருது பெற்ற இரா.செழியன் காலமானார்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் இன்று (10) காலை சென்னையில் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும், பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக பல முக்கியமான திரைப்படங்களில் பணியாற்றிய இரா. செழியன், கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு தனது ஒளிப்பதிவு திறமையை வழங்கியுள்ளார்.

திரைப்பட கலை குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட அவர், ஒளிப்பதிவு மற்றும் உலக சினிமா தொடர்பான எழுத்தாளராகவும் விளங்கினார்.


இயக்குநராக அவர் உருவாக்கிய ‘டூலெட்’ (TOLET) திரைப்படம் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் படைப்பாக பாராட்டப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இரா. செழியன், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.

பின்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் மட்டுமல்லாமல் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் கலை நுணுக்கமான படைப்புகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்த இரா. செழியனின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement