• Jul 23 2026

விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த பிரம்மாண்ட வழியனுப்பு! திருவிழாவான திரையரங்குகள்

Aathira / 57 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் அரசியல் பயணத்துக்குப் பிறகு வெளியாகும் அவரது இறுதித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பே, இந்தப் படத்தை ஆண்டின் மிகவும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது.

தணிக்கை தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’, உலகம் முழுவதும் சுமார் 3,500 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் திரைப்பயணத்திற்கு ரசிகர்கள் பிரம்மாண்டமான விடை கொடுக்கத் தயாராகியுள்ளனர்.


படம் வெளியாகும் முன்பே தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திருவிழா சூழலை ஒத்த காட்சியை உருவாக்கின. நேற்று இரவு முதலே விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் திரையரங்குகள் முன்பு திரண்டனர். பல இடங்களில் மேளதாளம் முழங்கிய நிலையில், பட்டாசுகள் வெடித்து, ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டங்கள் களைகட்டின.

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் விஜயின் பிரம்மாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் அலங்காரங்கள் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. ரசிகர்கள் விஜயின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது அன்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

தமிழகத்தைத் தாண்டியும் இந்தக் கொண்டாட்டம் பரவியது. கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நிரப்பினர். கர்நாடகாவில் அதிகாலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகக் கோஷங்களுடன் படத்தை வரவேற்றனர்.

தமிழகத்தில் காலை 9 மணி முதல் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், கடந்த ஏழு மாதங்களாக இந்தப் படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தனர்.

விஜயின் திரைப்பயணத்தின் நிறைவுப் படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, ரசிகர்களின் பேராதரவுடன் மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்றுள்ளதோடு, வசூலிலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement