இந்திய திரையிசையின் பொற்குரலாகவும், 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் போற்றப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு 88 வயது.
கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜானகியின் மறைவு செய்தி வெளியாகியதும், இந்திய திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. அரசியல் தலைவர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள உருக்கமான செய்தியில்,
"அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? 'சிங்கார வேலனே தேவா'வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே, முடிந்துவிட்டதா உன் மூச்சு?"என்று தொடங்கி, ஜானகியின் குரல் தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்திருந்ததை உணர்ச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், "தாய்மையாய்... தமிழாய்... காதலாய்... கருணையாய்... கண்ணீராய்... புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி... உனக்கும் மரணமா?" என்ற வரிகள் ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளன.
"உன் நாதம் இருக்கிறது... ஜீவன் இல்லையே" ஜானகி பாடிய "நாதம் என் ஜீவனே" என்ற பாடலை நினைவுகூர்ந்த வைரமுத்து, "நாதம் என் ஜீவனே என்றாயே... உன் நாதம் இருக்கிறது... ஜீவன் இல்லையே..." என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜானகியின் சிரித்த முகம், நெற்றியில் சிவப்பு பொட்டு, பாடும்போது உதடுகள் அசையும் அழகு போன்ற ஒவ்வொரு நினைவுகளையும் தனது பதிவில் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.
இறுதியாக, கவியரசு கண்ணதாசன் எழுதியும், ஜானகி பாடியும் ரசிகர்களின் இதயத்தில் நிலைத்திருக்கும் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, வைரமுத்து தனது அஞ்சலியை நிறைவு செய்துள்ளார்.
"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்... உன்னைத் தொடர்ந்திருப்பேன்... என்றும் துணையிருப்பேன்..." என்ற வரிகளுடன், "வாழ்க நீ அம்மா!" என்று தனது இறுதி அஞ்சலியை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
எஸ். ஜானகியின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், வைரமுத்து எழுதிய இந்த கவிதைநயமிக்க இரங்கல் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இசையை நேசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், "ஜானகியின் குரல் என்றும் அழியாது" என்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Listen News!