• Jul 15 2026

லஞ்ச வழக்கில் புதிய திருப்பம்; உயர்நீதிமன்றத்தில் ஐசரி கணேஷ் மனு தள்ளுபடி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

கல்வி நிறுவனங்களின் அதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தது.

இந்த நிலையில், தமக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐசரி கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் டாக்டர் பாலாஜிநாத், தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


அந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு பொலிஸார், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கிடைக்காததால், விசாரணையை முடித்து வைத்து, அது தொடர்பான அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு முடித்து வைக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கைத் தொடர முடியாது என்றும் ஐசரி கணேஷ் தரப்பு வாதிட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர், லஞ்ச ஒழிப்பு பொலிஸாரின் அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்று அதற்கு உத்தரவு பிறப்பித்த பின்னரே, இந்த மனு தொடர்பில் மேலதிகமாக பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, தாம் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற விரும்புவதாக ஐசரி கணேஷ் தரப்பு நீதிமன்றத்தில் அறிவித்தது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கியதுடன், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் மூலம், வேல்ஸ் மருத்துவ கல்லூரி அனுமதி தொடர்பான வழக்கில் மற்றொரு முக்கிய சட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement