குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது நடிகர், இயக்குநர் என தனது பயணத்தை தொடர்ந்து வரும் கென் கருணாஸ், புதிய சாதனை ஒன்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
யூத் திரைப்படத்தை இயக்கி, நடித்த கென் கருணாஸ், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தெலுங்கிலும் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘முட்ட கலக்கி’ பாடல் இணையத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப் தளத்தில் இந்த பாடல் 25 கோடி பார்வைகளை (250 மில்லியன்) கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாடலின் மற்றொரு சிறப்பம்சமாக, இதன் வரிகளை கென் கருணாஸே எழுதியதுடன், அவரே பாடியும் உள்ளார். இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
ஒரு இளம் தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உருவான ‘முட்ட கலக்கி’ பாடலின் இந்த சாதனை, ‘யூத்’ படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!