இந்திய திரையிசை உலகில் அழியாத தடம் பதித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த அவர் மறைவு, இந்திய இசை உலகையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
'ஜானகியம்மா', 'கான கோகிலா', 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்', 'இசை அரசி' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.
2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைப்படப் பாடல்களில் இருந்து விலகிய அவர், கர்நாடக மாநிலம் மைசூருவில் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் உயிரிழந்தது எஸ். ஜானகிக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த துயரத்திலிருந்து முழுமையாக மீள முடியாமல் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து மைசூருவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.

எஸ். ஜானகியின் உடல் மைசூருவிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பலரும் கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய காட்சிகள் மனதை உருக்கியன.
பொதுமக்கள் அஞ்சலி நிறைவடைந்த பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் மாலை 3 மணியளவில் இறுதி ஊர்வலமாக மைசூருவிலுள்ள அவரது பண்ணை வீட்டை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினரின் முன்னிலையில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் எஸ். ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி கர்நாடக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், காவல்துறையினர் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மைசூரு நகரை அடுத்துள்ள கனியனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் உறவினர்களின் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் ஹம்சலேகா, எஸ். ஜானகியின் நினைவாக மைசூருவில் நிரந்தர நினைவகம் அமைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது குரலால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த எஸ். ஜானகி, உடலால் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் ரசிகர்களின் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்திய இசை உலகம் மறக்க முடியாத ஒரு பொற்கால குரலை இழந்துள்ளது.
Listen News!