• Jul 26 2026

பாலகிருஷ்ணாவின் 111-வது படப்பிடிப்பில் எதிர்பாராத விபத்து; வெற்றிகரமாக முடிந்த சிகிச்சை

Aathira / 39 minutes ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ரித்தி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வந்தது. இந்தக் காட்சியில் வழக்கம்போல் 'டூப்' கலைஞரை பயன்படுத்தாமல், பாலகிருஷ்ணா நேரடியாக சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் நழுவியதால், அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இந்த விபத்தில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்து ஏற்பட்ட உடனேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பாலகிருஷ்ணா அருகிலிருந்த காக்கினாடா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்ப சிகிச்சைக்குப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இடது முழங்காலில் தசைக் கிழிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முழுமையாக குணமடைந்த பின்னர், பாலகிருஷ்ணா மீண்டும் தனது 111-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது விரைவான நலனுக்காக பிரார்த்தனைகளையும் வாழ்த்துச் செய்திகளையும் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement