• Mar 29 2025

மகனை இழந்த பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிய பிரபலங்கள்..!– திரைத்துறையையே கலங்கவைத்த மனோஜ்!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா தனது வாழ்க்கையின் மிக கொடூரமான தருணத்தை தற்பொழுது எதிர்கொண்டிருக்கின்றார். திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த பாரதியராஜாவின் மகனான மனோஜ் 48வது வயதில் காலமான செய்தி திரைத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போராட்டம் நிறைந்த சினிமா வாழ்க்கையைத் தொடர்ந்து, தந்தையின் பெயருக்காக தன்னை நிரூபிக்க எண்ணிய மனோஜ், மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மகனை இழந்து வாடும் பாரதிராஜாவை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது கையைப் பிடித்து ஆறுதல் கூறியுள்ளனர். இந்த தருணத்தில் பாரதிராஜாவின் நெஞ்சை தொட்டபடி, “இது வாழ்க்கையின் மிக மோசமான நேரம். நாங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தோடு இருக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் மனோஜின் வீட்டுக்குச் சென்ற தம்பி ராமையா, இது ஏற்கவே முடியாத விடயம் எனக் கூறியுள்ளார். அத்துடன்,“ஒரு பெரிய மனிதருக்குப் பிறந்தவனாக இருக்குறதாலே எதையும் சாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கக்கூடாது. அப்பாவோட இடத்தை பிடிக்கணும் என்ற வெறி தான் மன அழுத்தத்துக்குக் காரணம்”எனவும் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.

திரைத்துறையின் முக்கிய முன்னணி நடிகரான நசார், மனோஜ் மீது அவர் கொண்ட அன்பு மற்றும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் “மனோஜ் எல்லாரிடமும் அன்புடன் நடந்து கொண்டவர். இந்த இழப்புக்கு ஈடு செய்ய யாராலும் முடியாது" என்றார் நசார்.

அதுமட்டும் மல்லாது நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், "மனோஜ் தன்னை எந்த இடத்தில பாத்தாலும் அண்ணன் என்று உரிமையாக பேசிய ஒருவர். மேலும் எந்த ஒரு தாய் , தகப்பனுக்கும் இப்படி ஒரு சூழ்நிலை அமையவே கூடாது. இது வாழ்நாள் முழுக்க சுமையாகவே இருக்கும்" என்றார்.


அத்துடன் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய், கவுண்டமணி, பாக்கியராஜ், சரத்குமார், சஞ்சீவ், பாலா, சூரி மற்றும் சங்கர் எனப் பலரும் வந்திருந்தனர். நடிகர் சரத்குமார் அதன்போது, “நாம் உயிரோட இருக்கும் போதே நம்ம பிள்ளைகளை இழக்குற அந்த வலி மறக்கவே முடியாத ஒன்று”என உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.

ஒரு தந்தைக்கு மகனை இழக்கும் துயரத்தை சொற்களில் விவரிக்க முடியாது. பாரதிராஜாவுக்கு நேர்ந்த இழப்பு, தமிழ் சினிமா வரலாற்றில் மனதை உருக்கும் நிகழ்வாக காணப்படுகிறது. மனோஜின் கனவுகள் நிறைவேறாமல் போனாலும், அவரை நேசித்தவர்கள் மனங்களில் அவர் என்றும் உயிருடன் இருப்பார் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement