• Jul 20 2026

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படப்பிடிப்பு நிறைவு! ரசிகர்கள் உற்சாகம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருகிறார். வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


சமீபத்தில் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் “இந்த ஷெட்யூல் முடிந்தது” என அறிவிப்பதுடன், படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிம்பு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் தருணங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் ‘அரசன்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement