• Jul 09 2026

'எண்ணம்போல் தான் வாழ்க்கை..' கொடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் ரசிகர் மன்றம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அண்மையில் வெளியான கர திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஓம் திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 16 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தனுஷின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ரசிகர் மன்றக் கொடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தக் கொடியில் இடம்பெற்றிருந்த “எண்ணம்போல் தான் வாழ்க்கை” என்ற வாசகம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்தக் கொடியை வைத்து, தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது அவரது அரசியல் பயணத்திற்கான முதல் படியாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.


ஆனால், இந்த தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சிவா, தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான இவர், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும், கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வரும் அதே கொடி என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ரசிகர் மன்ற நிகழ்வுகளில் இந்தக் கொடி நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தின் போது, சில ரசிகர்கள் அந்தக் கொடியை கார்களில் பொருத்தும் வகையில் புதிய வடிவில் தயாரித்து கொண்டு வந்ததாகவும், அதனை நிர்வாகிகளின் வாகனங்களில் பொருத்தியதை சிலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், வழக்கமான ரசிகர் மன்றக் கொடியை புதிய அறிமுகம் என்றும், தனுஷின் அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம், தனுஷின் அரசியல் வருகை தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு ரசிகர் மன்றம் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.

குறிப்பாக, திருடா திருடி மற்றும் சீடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா, தனுஷின் திரைப்பயணத்தில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement