தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தனது இடத்தை நிலைநிறுத்த போராடி வரும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, தற்போது வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தின் வெற்றி புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், லிசி ஆண்டனி, முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் வெற்றி விழாவை கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், தனது நீண்ட கால திரைப்பயணத்தை நினைவுகூர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அதில் அவர் கூறுகையில்,

பல தருணங்களில் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக நான் செய்த உழைப்புக்கான பலன் தற்போது கிடைத்துள்ளது போன்ற உணர்வு இருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.
மேலும், தற்போதைய சூழலில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறைந்து வருவதாக குறிப்பிட்ட விஷ்ணு விஷால், ‘கட்டா குஸ்தி-2’ போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். நல்ல கதைகளும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படங்களும் தொடர்ந்து வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, திரைத்துறையில் தொழில்முறை நேர்மையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

பல படங்களில் சிலர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. சொன்ன கதாபாத்திரங்களையும் வழங்குவதில்லை. ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். அதுதான் தொழில்முறை நேர்மை என விஷ்ணு விஷால் வலியுறுத்தினார்.
இதேவேளை, நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஒரு நடிகராக எப்போதும் போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் வெற்றி என்பது அவ்வப்போது மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என அவர் தெரிவித்தார்.
நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் கிடைத்த வெற்றியாகவும் ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தின் வெற்றி விழா அமைந்துள்ளது.
Listen News!