தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படமான "ரெட்ரோ" மூலமாக மீண்டும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கின்றார். மே 1ம் திகதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சூர்யாவின் புதிய அவதாரம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நேற்று கேரளா மாநிலத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா, ரசிகர்களுடன் உரையாடிய போது ஒரு முக்கியமான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
அதன் போது அவர் கூறியதாவது, "குடிப்பழக்கம் மற்றும் புகைத்தல் பழக்கம் மனிதர்களை அடிமைகளாக்கி விடும். படத்திற்காக மட்டுமே நான் சிகரெட் பிடிக்கிறேன். நீங்கள் யாரும் "ஒரு சிகரெட் தானே" என்று நினைத்துப் பழக வேண்டாம். அதுவே ஒரு பெரிய பழக்கமாக மாறிவிடும். இதை நான் ஆதரிக்க மாட்டேன்," என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
மேலும், படங்கள் மட்டுமே சிகரெட்டை நியாயப்படுத்துவதற்கான வழி அல்ல என்றும் கூறியிருந்தார். ரசிகர்களை நேர்காணல்களில் சந்திக்கும் போது, "உங்களுக்காகவே நான் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கின்றேன்." என்று மனம் திறந்து தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்தக் கருத்துக்களுக்குப் பல ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!