சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை 1960-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் நடைபெறுவதால், அந்த காலத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் படக்குழு மிகுந்த கவனத்துடன் பணியாற்றியுள்ளது. பழைய காலத்து வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், ஆடைகள், அலங்காரங்கள் என அனைத்தையும் இயல்பாக உருவாக்குவதற்காக, படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.
இவ்வளவு உழைப்புடன் உருவாக்கப்பட்ட பொருட்கள் படப்பிடிப்புடன் முடிந்து போகாமல், பொதுமக்களும் காண வேண்டும் என்ற நோக்கில், படக்குழு ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘World of Parasakthi’ என்ற பெயரில் பிரம்மாண்ட கண்காட்சி ஒன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில், படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பல பழங்காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினரும் இந்த கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இயக்குநர் சுதா கொங்கரா, சமூக அக்கறை கொண்ட கதைகளைத் திரையாக்குவதில் பெயர் பெற்றவர். ‘பராசக்தி’ படத்திலும் அதே போன்று, ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை மையமாக வைத்து கதை நகரும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் உருவாக்கியுள்ளார்.
‘World of Parasakthi’ கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், தனது 25வது படமான ‘பராசக்தி’ குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், “எனது 25வது படம் இப்படி கிடைப்பது பராசக்தியின் அருள். அத்துடன், காதல், சண்டை என அனைத்தும் இருந்தாலும், இப்படம் ரொம்ப முக்கியமான பிரச்சினையை பேசும். மாணவர்கள் பவர் என்ன என்பதை இந்த படம் காட்டும். ‘பராசக்தி’ ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.” எனத் தெரிவித்தார்.
Listen News!