தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'சிக்மா'. முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படம், இன்னும் வெளியாகும் முன்பே அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான 'சிக்மா ஸ்டைல்' என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இசையமைப்பாளர் தமன் இசையில் உருவான இந்தப் பாடலில், இயக்குநர் ஜேசன் சஞ்சய்யும் தோன்றியிருந்தது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ள ஜேசன் சஞ்சய், ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்துள்ளார்.

இதற்கிடையில், படத்தைச் சுற்றி மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சிக்மா' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், திரையுலக வட்டாரங்களில் இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் உரிமைக்கு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவது, அந்தப் படத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கனவே ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓடிடி ஒப்பந்தம் குறித்த இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
ஜேசன் சஞ்சய்யின் முதல் இயக்க முயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? திரையரங்கிலும், ஓடிடியிலும் 'சிக்மா' புதிய சாதனை படைக்குமா? என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!