பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது இளம்பெண் வஹிதா அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து, பொலிஸார் அவரைத் தேடி வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உடல் உறவில் ஈடுபட்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகவும் வஹிதா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், தற்கொலைக்கும் முயன்றதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய வஹிதா, தனக்கு நீதி கோரி யூடியூப் தளத்தில் காணொளிகளை வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில், முத்துக்குமரனின் பெற்றோரை அவரது சொந்த ஊரில் சந்தித்துப் பேசிய வஹிதாவுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கடந்த நவம்பர் 16ஆம் திகதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்து, தன்னிடமுள்ள ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருமண வாக்குறுதி அளித்து உடல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 69ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக முத்துக்குமரனுக்கு சம்மன் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டிருந்ததாகவும், அவரது வீடு நீண்டகாலமாகப் பூட்டிக் கிடப்பதால் அவரைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!