தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் விஷயம் ஒன்று என்றால் அது நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் களமிறங்கப் போகிறாரா என்பதுதான். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் அவர் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், லாரன்ஸ் எப்படிப்பட்டவர் அப்படின்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை. கோடி கோடியா சம்பாதிச்சு சொத்து சேர்க்கிற நடிகர்கள் இருக்கும்போது, தன்னால முடிஞ்ச உதவிகளை ஏழை மக்களுக்கு பண்ணிக்கிட்டே இருக்கிற மனுஷன் லாரன்ஸ்..
மேலும், 'ஜெய்பீம்' திரைப்படத்தின் உண்மைக் கதாநாயகி பார்வதி அம்மாளுக்கு லாரன்ஸ் நேரில் சென்று உதவி செய்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.

நாங்க வலைப்பேச்சுல சொன்ன உடனே லாரன்ஸ் போன் பண்ணி, 'சார் அந்த அம்மாவை பார்க்கணும், கூட்டிட்டு போறீங்களா?'ன்னு கேட்டாரு. குடிசை வீட்டுக்குள்ள போய் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, 'உங்களுக்கு நான் வீடு கட்டித் தர்றேம்மா'ன்னு சொன்னாரு. நாங்க கண்கூடா பார்த்த வள்ளல் அவர்தான் என்று அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் மீது லாரன்ஸுக்கு இருக்கும் மரியாதை குறித்தும் அவர் கூறுகையில், ராமனுக்கு அனுமன் எப்படி பக்தனா இருந்தானோ, அந்த மாதிரி ரஜினிக்கு லாரன்ஸ் ஒரு பக்தர். சீமான் ரஜினியை விமர்சனம் செய்தப்போ கூட அவருக்கு எதிரா இவ்வளவு தைரியமா பேசிய நடிகர் லாரன்ஸ்தான் என்றார்.
இந்நிலையில், தவெக கொடியுடன் லாரன்ஸ் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதேபோல் அவரது ரசிகர் பக்கங்களிலும் இந்த தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து லாரன்ஸ் இதுவரை நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை என்பதே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி கிழக்குல நான் நிற்கல... இல்ல நிற்கிறேன்... இதுல ஏதாவது ஒண்ணு சொல்ல வேண்டியதுதானே. அத விடுத்துட்டு, 11ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியிடுறேன்னு சொன்னா மக்கள் குழப்பமடைய மாட்டாங்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வதந்திகளுக்கு உடனடியா முற்றுப்புள்ளி வைக்கணும்ல. அத விடுத்துட்டு இன்னும் ரெண்டு நாள் இழுத்துட்டு போறது ஏன்? மக்கள் நம்மள பத்தி பேசிட்டு இருக்கட்டுமேன்னு நினைக்கிறாரு போல என்றும் விமர்சித்தார்.
அதே நேரத்தில், தவெக தரப்பில் லாரன்ஸ் தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்ற தகவல் கிடைத்ததாகவும், மறுபுறம் அவர் அண்ணாமலை தரப்பில் இணையலாம் என்ற பேச்சுகளும் நிலவுவதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர், என்னை கேட்டா விஜய் கட்சியில அவர் இணையப் போறதில்லை. தவெக சார்பா திருச்சி கிழக்குல நிற்கப் போறதுமில்லை. ஆனா 11ஆம் தேதி என்ன அறிவிக்கப் போறாருன்னு நானும் உங்களை மாதிரியே காத்திருக்கேன் என்றார்.
அதே நேரத்தில், அரசியலுக்கு லாரன்ஸ் வருவது தவறில்லை. ஏழை மக்களுக்கு நல்லது செய்யணும், அனாதைகளை காப்பாத்தணும், நோயாளிகளை குணப்படுத்தணும் என்று உண்மையா நினைக்கிற மனிதர் லாரன்ஸ். அவர் அரசியலுக்கு வர்றது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்தான். ஆனா தனியா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு பதிலா, மக்களுக்கு பயன் தரக்கூடிய சரியான பாதையை தேர்ந்தெடுத்தா நல்லது என்று அவர் கூறினார்.
இதனால், ஜூன் 11ஆம் தேதி ராகவா லாரன்ஸ் வெளியிட உள்ள அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
Listen News!