இந்திய சினிமாவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கும் இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை வழங்கியவர். அதேபோல், பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இந்த இருவரும் இணைந்து உருவாக்கிய ஹிந்தி திரைப்படம் ‘சிக்கந்தர்’ குறித்து தற்போது மீண்டும் பேசப்பட துவங்கியுள்ளது.
இயக்குநர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டிகளில், “சிக்கந்தர்” படப்பிடிப்பில் சல்மான் கான் தொடர்ந்து தாமதமாக வந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடியாக, பிக் பாஸ் ஹிந்தி சீசனின் நிகழ்ச்சியில் சல்மான் கான் தனது பதிலை நகைச்சுவையான மொழியில் தெரிவித்து இருந்தது வைரலாகியுள்ளது.
‘சிக்கந்தர்’ திரைப்படம் ஒரு மாபெரும் பட்ஜெட்டில் உருவான படம். இதில் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தாலும், ரசிகர்களிடையே பெரிதளவில் வரவேற்பு பெறவில்லை. வசூலில் சராசரி மட்டத்தில் தான் படம் நிறைவடைந்தது.
இதுகுறித்து பேசிய முருகதாஸ், “சல்மான் கான் அடிக்கடி தாமதமாக தான் படப்பிடிப்புக்கு வந்தார். சில நேரங்களில் அவர் இரவு 9 மணிக்குத் தான் செட்டுக்கு வந்திருக்கிறார். அந்த நேரம் வரைக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் காத்திருக்க வேண்டி வந்தது,” என குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உரையாற்றிய சல்மான், தன்னிடம் உள்ள நகைச்சுவை உணர்வை கொண்டு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது, "ஆம், சிக்கந்தர் படப்பிடிப்பில் நான் இரவு 9 மணிக்கு தான் செட்டுக்கு வந்தேன். அதே முருகதாஸ் ஒரு படம் எடுத்தார் 'மதராஸி' என்று... அதில் ஹீரோ காலை 6 மணிக்கு எல்லாம் செட்டுக்கு வந்துவிடுவார். ஆனால், அந்தப் படம் சிக்கந்தரை விட பெரிய `ப்ளாக் பஸ்டர்' ஆகிவிட்டது'" என நக்கலாக கூறியுள்ளார்.
இந்த எல்லா உரையாடல்களையும் பார்த்தால், சல்மான் கானுக்கும் முருகதாஸுக்கும் இடையே ஒரு மெல்லிய பிரிவு நிலை உருவாகியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Listen News!