இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் R. நல்லக்கண்ணு (101) இன்று காலமானார். வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 1.55 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தி வெளியாகியதும், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் துக்கம் நிலவுகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க தலைவராக விளங்கினார். எளிமையான வாழ்க்கை முறை, உறுதியான கொள்கை நிலைப்பாடு மற்றும் பொதுமக்கள் நலன் குறித்த அக்கறை ஆகியவற்றால் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில், “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது ரசிகர்களும், அரசியல் ஆர்வலர்களும் அந்த பதிவை பகிர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Listen News!