நடிகர் பாலா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சிவாவின் சகோதரரான பாலா, கடந்த சில ஆண்டுகளாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள பாலா, தனது வாழ்க்கையில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மனஅழுத்தம் மற்றும் வேதனையை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலாவிற்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், அவரது முதல் மனைவி முன்வைத்த சில புகார்களை தொடர்ந்து பல வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான வீடியோவில், “என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பல உண்மைகளை நான் இதுவரை வெளியே சொல்லவில்லை. சிலரை காப்பாற்றுவதற்காகவே அமைதியாக இருந்தேன். ஆனால் இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். மேலும், சில ஊடகங்கள் வெறும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்காக பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னைச் சுற்றி தொடர்ந்து உருவாகும் வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய பாலா, “இனி யாராவது என்னைப் பற்றி தவறாக பேசினால் அனைத்து உண்மைகளையும் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்துவேன்.” என எச்சரித்துள்ளார். கடைசியாக, “உண்மை வெளிவரக்கூடாது என்றால் என்னையும் என் மனைவியையும் கொன்றுவிடுங்கள்.” என அவர் உருக்கமாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!