நடிகர் விஜய் நடித்துள்ள மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாதது, ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், திடீரென ஏற்பட்ட இந்த தாமதத்தால் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியும், படத்தின் வெளியீடு தாமதமானதற்கான காரணங்களை விளக்கியும் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தணிக்கை சான்றிதழ் பெறும் பணியில் நடந்த நிகழ்வுகளை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2025 டிசம்பர் 18-ந்தேதி தணிக்கை வாரியத்திடம் (CBFC) அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், தணிக்கை குழுவினர் படத்தை முழுமையாக பார்த்து ஆய்வு செய்ததாகவும், 2025 டிசம்பர் 22-ந்தேதி தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த மின்னஞ்சலில், சில மாற்றங்களை செய்தால் படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
தணிக்கை குழுவினர் பரிந்துரைத்த அனைத்து மாற்றங்களையும் தயாரிப்பு குழு உடனடியாக மேற்கொண்டதாக தெரிவித்த வெங்கட் நாராயணா, அந்த மாற்றங்களுக்குப் பிறகு படத்தை மீண்டும் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பித்ததாக கூறினார். “மாற்றங்கள் அனைத்தையும் செய்து மீண்டும் சமர்ப்பித்த போது, படத்திற்கு விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் தான் நாங்கள் இருந்தோம்,” என அவர் விளக்கினார்.
ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், 2026 ஜனவரி 5-ந்தேதி மாலை தயாரிப்பு குழுவுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்ததாக அவர் தெரிவித்தார். அதன்படி, ஒரு புகாரின் அடிப்படையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மறுஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தகவல் அளித்ததாக கூறினார்.
ரிலீஸ் தேதி மிகவும் அருகில் இருந்ததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு உடனடியாக ஐகோர்ட்டை அணுகி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வெங்கட் நாராயணா தெரிவித்தார். படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டபூர்வமான வழிகளிலும் முயற்சி செய்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், “எவ்வளவு முயன்றும், எங்களால் படத்தை திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விட்டது,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த தாமதம் படக்குழுவினருக்கும், குறிப்பாக பல ஆண்டுகளாக இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மிகவும் கடினமான காலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Listen News!