தமிழ் சினிமாவில் காதலின் உணர்வுகளை மிக மென்மையாகவும், மனதை நெகிழச் செய்யும் வகையிலும் பேச வைத்த படம் '96'. 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது. இதில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்துக் கொண்ட பாசத்துக்கும், பிரிவுக்கும் இடையே சிக்கிக்கொண்ட காதல் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டது.
இப்படத்தின் இயக்குநரான பிரேம் குமார், தற்போது ரசிகர்களுக்கு ஒரு மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளார். அவர் தெரிவித்ததுபோல், '96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை அவர் ஏற்கனவே எழுதி முடித்துவிட்டார்! அதுவும், அந்த கதை முதல் பாகத்தை விட நெகிழ்ச்சிகரமாகவும், அற்புதமாகவும் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
மேலும்,இயக்குநர் பிரேம் குமார், தனது உற்சாகத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அதாவது, “96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்து விட்டேன். முதல் பாகத்தை விட இது அற்புதமாக இருக்கும். கதையை படித்த பலரும் 'இது 96-ஐ விட நன்றாக இருக்கிறது' என்று சொன்னார்கள். இது எனக்கு மிகப் பெரிய உற்சாகம்.”
அதுமட்டுமல்லாது, "தயாரிப்பாளர் கதையை படித்து விட்டு சில லட்சங்கள் மதிப்புள்ள சங்கிலியை அணிவித்தார். கதைக்காக மட்டுமே கிடைத்த பரிசு இது. ஒரு எழுத்தாளனுக்கு இதை விட என்ன வேணும்.? 96 படத்தில் நடித்தவர்களை வைத்தே 96-பாகம் இரண்டையும் எடுப்பேன். இல்லையெனில் இந்த படத்தையே எடுக்க மாட்டேன்." என்றும் இயக்குநர் பிரேம் குமார் கூறியுள்ளார்.
Listen News!