2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்ட விருதுகளின்படி, 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விஜய் சேதுபதி, சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ், 2017ஆம் ஆண்டில் சிறந்த நடிகராக கார்த்தி, சிறந்த நடிகையாக நயன்தாரா, 2018ஆம் ஆண்டில் தனுஷ், ஜோதிகா, 2019ஆம் ஆண்டில் பார்த்திபன், மஞ்சு வாரியர்,
2020ஆம் ஆண்டில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, 2021ஆம் ஆண்டில் ஆர்யா, லிஜோ மோல் ஜோஸ், 2022ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு, சாய் பல்லவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள் பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளநிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பலரும் தமிழ்நாடு அரசுக்கு சமூக வலைதளங்களில் நன்றியை தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டதை கேலி செய்யும் வகையில், “புரியாத புதிரில் நடித்ததற்கு சிறந்த நடிகர்… விருது என்பது புரியாத புதிர்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இயக்குநர் பா. ரஞ்சித் கூட தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!