• Mar 13 2026

பட ப்ரோமோஷனுக்கு 'நோ' சொல்லும் அஜித்.. குளிர்பான விளம்பரத்தில் நடித்தது ஏன்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார்,  தனிப்பட்ட கொள்கைகளுக்காக ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றவர். இவர் தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகின்றார்.

இதனால் சொந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் விலகி நிற்பது அவரது வழக்கமாக காணப்படுகிறது. மேலும் ஒரு வருடத்தில் பாதி மாதங்களை கார் ரேசிங்கிலும் மீதி மாதங்களை பட ஷூட்டிற்கும் என்று வகுத்து வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்துள்ள ஒரு தனியார் குளிர்பான நிறுவனத்தின் விளம்பரம் இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் பொதுவாக திரைப்பட ப்ரமோஷன், இசை வெளியீட்டு விழா, பேட்டிகள் போன்றவற்றில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். 


இதனால், அவர் நடித்த பல திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும், அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாதது தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

அஜித்குமாருக்கு ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய பெரிய தொகையை செலுத்தும் தயாரிப்பாளர்களுக்கு, நடிகரின் ப்ரமோஷன் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அஜித் அதில் பங்கேற்காதது திரைத்துறையில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில், அஜித்குமார் தனது சொந்த கார் ரேஸிங் அணிக்காக, ஒரு தனியார் குளிர்பான நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் விளம்பரத்தில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

மேலும், ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என விமர்சிக்கப்படும் குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்தது சரியா?  சொந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கும் நடிகர், சொந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்கு மட்டும் நேரம் ஒதுக்குவது நியாயமா? எனவும் நெட்டிசன்கள்  கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 


  

Advertisement

Advertisement