சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இணைந்து திரையில் தோன்றிய காட்சிகளைக் காண இரு நடிகர்களின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளரான ஜிஷாத் ஷம்சுதீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் பதிவில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மோகன்லால் சாரின் மூன்று தனித்துவமான தோற்றங்கள் முழுமையாக நீக்கப்பட்டதாகவும், படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற இரண்டு வினாடிக் காட்சிகூட இறுதிப் படத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோகன்லால் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் நடித்த காட்சிகளை இவ்வாறு வெட்டிச் சுருக்குவது தேவையற்றது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டிரெய்லரில் இடம்பெற்ற காட்சியே படத்தில் இல்லாதது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
எனினும், இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மோகன்லாலின் ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
Listen News!