• Jul 30 2026

மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நிறைவேற்றிய நடனப் புயல்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையும், ரசிகர்களால் "நடனப் புயல்" என கொண்டாடப்படும் சிம்ரன், தனது தீவிர ரசிகையான 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த நிஷா, ஒரு கை இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி சிறுமி. வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் இழக்காமல் தொடர்ந்து சாதிக்க முயன்று வருகிறார்.

சிறுவயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நிஷா, முறையான பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடனங்களை பார்த்து தானாகவே கற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக நடிகை சிம்ரனின் நடனங்கள் அவரை மிகவும் கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எனக்கு ஒரு கை இல்லை என்று சில நேரங்களில் வருத்தப்படுவேன். ஆனால் நடனம் ஆடும் போது அந்த கவலைகளை மறந்து விடுகிறேன். நடனம்தான் என் உலகம்" என நிஷா தெரிவித்திருந்தார்.


நிஷாவின் திறமையையும், விடாமுயற்சியையும் வெளிக்கொண்டு வர சமூக ஆர்வலர் முகமது ஆஷிக், அவரது நடன வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளிகள் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகை சிம்ரனின் பார்வைக்கும் சென்றடைந்தன.

இதனைத் தொடர்ந்து, நிஷாவை நேரில் சந்திக்க விரும்பிய சிம்ரன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘யூத்’ திரைப்படத்தின் பிரபல பாடலான ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு நிஷா உற்சாகமாக நடனமாடிக் காட்டியுள்ளார்.

சிறுமியின் நடனத் திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த சிம்ரன், அவருடன் இணைந்து அதே பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்துள்ளார். தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த தனது கனவு நட்சத்திரத்துடன் நேரில் இணைந்து ஆடிய அந்த தருணம், நிஷாவுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.

மேலும், தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும் நிஷாவுக்கு சைக்கிள் வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்த சிம்ரன், அவருக்கு புதிய மிதிவண்டி ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

ஒரு சிறுமியின் திறமையை மட்டும் பாராட்டாமல், அவரது கனவுக்கும் துணையாக நின்ற சிம்ரனின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது

Advertisement

Advertisement