• Jun 28 2026

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ பூஜையுடன் தொடங்கிய யோகி பாபுவின் புதிய படம்.!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் யோகி பாபு, தற்போது மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். 

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.ஆர். செந்தில் நாதன் இயக்கும் இந்தப் படம், விளையாட்டு மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்த கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படம் குறித்து பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஒவ்வொரு இயக்குநருக்கும் மனதில் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும் என்றும், அதுபோல இயக்குநர் செந்தில்நாதனுக்கு இந்தப் படம் மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார். 

பல்வேறு சவால்களையும் தடைகளையும் கடந்து தற்போது படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகக் கூறிய அவர், இந்தப் படம் எந்தவித இடையூறும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், போஸ்டரைப் பார்த்து தாம் உடற்பயிற்சி ஆசிரியராக மட்டுமே நடித்திருப்பதாக ரசிகர்கள் நினைக்க வேண்டாம் என்றும், படத்தைப் பார்த்த பிறகே தனது கதாபாத்திரத்தின் உண்மையான பரிமாணம் அனைவருக்கும் புரியும் என்றும் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளராக ஷிஹாப் பட்டாம்பி, படத்தொகுப்பாளராக எஸ்.பி. அகமது, கலை இயக்குநராக ரெம்பன் பல்ராஜ், சண்டைக் காட்சிகளை ஜாக்கி பிரபு கவனித்து வருகின்றனர்.

காவியா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்2 மூவிஸ் நிறுவனங்களின் சார்பில் பி. மஞ்சுநாத் இப்படத்தை தயாரிக்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக சலேம் சரவணன் பணியாற்றுகிறார்.

வித்தியாசமான தலைப்பு, திறமையான நடிகர் பட்டாளம் மற்றும் புதிய கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement