• Dec 04 2023

யானைகள் இல்லாமல் காடு இல்லை காடு இல்லாமல் நாடு இல்லை... ஜிகர்தண்டா படம் வேற லெவல்... புகழ்ந்து தள்ளிய செந்தமிழன் சீமான்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பார்த்த சீமான் தனது டுவிட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு களித்தேன். உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.
 

'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ,  காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச்சிறப்பானது.யானைகள் இல்லாமல் காடு இல்லை! காடு இல்லாமல் நாடு இல்லை! என்பவை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற செய்தியல்ல; மிகப்பெரிய புவியியல் உண்மையாகும். அதன் வளங்களையும் அழித்தொழிப்பதென்பது எத்தகைய பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவுசெய்யுள்ளர் தம்பி கார்த்திக் சுப்புராஜ். இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம்.

 
தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப் பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.

 

இத்திரைப்படத்தில் என்னுடைய தம்பி எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் கதையின் நாயகனாக வேறு ஒரு பரிணாமத்தில் தோன்றி அசத்தியுள்ளார். அதைப்போன்று தம்பி ராகவா லாரன்சு அவர்களுக்கும் இது முற்றிலும் மாறுதலான படமாக அமைந்துள்ளது. இரு நாயகர்களுமே போட்டி போட்டு நடித்து படத்தினை வெற்றிப்பெறச்செய்துள்ளனர். புதுமுகம் தம்பி விது அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது.மாமா இளவரசு மற்றும் கதையின் நாயகிகளான நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தினை மேலும் மெருகேற்றியுள்ளது. யானைகள் வரும் சண்டைக் காட்சிகள் வரைகலையில் எடுக்கப்பட்டதுதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு மிகவும் உயிரோட்டமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்துள்ளது.பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பேசும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இதுவரை காணத் தவறிய உலகெங்கும் பரவிவாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவரும், நம் உள்ளத்து உணர்வினைப் பேசும் இத்திரைக்காவியத்தைத் 
திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களித்து படத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்  என சீமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement