• May 13 2026

TVK பெரும்பான்மையை நிரூபிக்குமா.? இன்று வெளியாகும் இறுதி முடிவு.. முழு விபரம் இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக  பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினமும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

17வது சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. தற்போது அந்த ஆட்சிக்கான உண்மையான சோதனை இன்று சட்டசபையில் நடைபெற உள்ளது.

த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், ஆட்சியமைக்க அழைப்பு கோரி ஆளுநர் அர்லேக்கரை சந்தித்த போது, இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் அதனை ஏற்காத ஆளுநர், மே 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் ஆட்சி அமைத்த உடனே த.வெ.க.-வுக்கு சிறிய பின்னடைவும் ஏற்பட்டது.


திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜோசப் விஜய் தனது MLA பதவியை ராஜினாமா செய்ததால், கட்சியின் பலம் 108-இல் இருந்து 107 ஆக குறைந்தது. 

மேலும் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைய கணக்கில் த.வெ.க.-வின் பலம் 106 ஆக உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் கூட்டணியின் மொத்த பலம் 119 ஆக உயர்ந்துள்ளது.


சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பை நடத்துவார். வாக்கெடுப்பின்போது சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, பிரிவு வாரியாக உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அதே நேரத்தில், அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் விஜய் இன்று தனது முதல் அரசியல் அக்னி பரிட்சையில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதும், அதன் தகவல் அதிகாரப்பூர்வமாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். 

Advertisement

Advertisement