• Nov 22 2024

நீட் தேர்வு கதை தேறியதா? அவுட்டேட்டான திரைக்கதையால் அயற்சி..! ‘அஞ்சாமை’ திரைவிமர்சனம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதையே ஒரு கதையாக கொண்டு ‘அஞ்சாமை’ என்ற திரைப்படத்தை இயக்குனர் சுப்புராமன் எடுத்து உள்ள நிலையில் தெளிவான திரைக்கதை இல்லாத காரணத்தினால் பார்வையாளர்களுக்கு அயற்சி ஏற்படுகிறது.

விதார்த் என்ற விவசாயி தனது மனைவி வாணி போஜன் மற்றும் மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். பத்தாம் வகுப்பில் தனது மகன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால் நீட் தேர்வு அவருக்கு பெரும் தடையாக இருக்க, குடும்பத்தில் இழப்பு, பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க முன் வரும் ரகுமான் என்ற வழக்கறிஞர், அவர்கள் குடும்பத்தின் பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? என்பது தான்.

இந்த படத்தின் நாயகன் விதார்த், குடும்பத்தின் மீது பாசம், மகன் கனவுக்காக உழைக்கும் தந்தை,  மகன் சோகமாக போதெல்லாம் துணை நிற்கும் பொறுப்பான வழிகாட்டி என தனது நடிப்பில் அசத்துகிறார். முக பாவனைகள், எமோஷனல் காட்சிகளில் அவர் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனது கேரக்டருக்கு முடிந்த அளவு உயிர் கொடுத்து இருக்கிறார் என்றால் அது மிகையில்லை.



விதார்த் மகனாக நடித்தவர் இந்த வயதிற்கான நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். வாணி போஜனுக்கு பெரிய வேலையில்லை என்றாலும் அவ்வப்போது சண்டை போடுகிறார், அழுகிறார். பல ஆண்டுகளாக திரையில் இருக்கும் ரகுமான் நீதிமன்ற காட்சிகளில் வசனத்தை எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் ஒப்பிப்பது போல் இருப்பது மிகப் பெரிய மைனஸ்.

தொடக்கத்தில் கதை கொஞ்சம் சிறப்பாக அமைந்தாலும் நீட் தேர்வுக்காக தனியார் மையங்கள் செய்யும் அட்டகாசங்கள், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள், நிர்வாக ரீதியான அலட்சியங்கள், அதன் பின்னால் இருக்கும் அரசியல், நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் என அடுத்தக்கான காட்சிகள் வரும்போது இது ஒரு டாக்குமென்டரி படம் போல் சென்று கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அரசையும் அதிகாரிகளையும் இந்த படம் கேள்வி கேட்டாலும் அதில் நாடகத் தன்மை அதிகமாக இருப்பதால் மனதில் ஒட்ட மறுக்கிறது. நீட் தேர்வுக்கு பின்னால் உள்ள அரசியல், அரசு அதிகாரிகளின் அலட்சியம், சாமானியர்கள் இதனால் பாதிக்கப்படுவது போன்றவைகளை காட்டமாக பேசினாலும், நீதிமன்ற காட்சிகள் அனைத்துமே முழுக்க முழுக்க நாடகத் தன்மையுடன் இருக்கிறது.

மேலும் படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து ஒரே பக்கமாக இருப்பது போல் தெரிகிறது. நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை காட்டிய இயக்குனர், நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் பயனடைந்தனர் என்பதையும் காண்பித்திருக்கலாம், அப்படி காண்பித்து இருந்தால் இந்த படம் ஒரு நடுநிலையாக இருந்திருக்கும்.

 ஆனால் ஒரு கட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான கதையிலிருந்து விலகி தேர்வு மையங்களில் அடிக்கும் கொள்ளை, தேர்வு மையங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என படம் பாதை மாறி போகிறது. தெளிவான அரசியல் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணாமல் அவுட்டேட்டான திரைக்கதையால் ’அஞ்சாமை’ படத்தை பார்த்துட்டு வெளியே வரும் போது அயற்சி தான் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement