தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார். இப்படியான நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் குறித்து அவர் சமீபத்தில் கூறிய கருத்துகள் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளன.

சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, ‘சிக்கந்தர்’ படத்தின் கதை ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விதத்துக்கும், இறுதியாக திரையில் வந்த வடிவத்துக்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், “ஆரம்பத்தில் முருகதாஸ் சார் சிக்கந்தர் கதையை என்னிடம் சொன்னது வேறாக இருந்தது. ஆனால், படமாக எடுத்த போது அது வேறு விதமாக மாறி இருந்தது. ஆனால் இது போன்றவை பொதுவாக நடக்கும். ரிலீஸ் தேதிக்கு ஏற்ப மாற்றங்களும், திருத்தங்களும் நடக்கும். அது சிக்கந்தரில் நடந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் , ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த ‘சிக்கந்தர்’ படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிபூர்வமான கதைகளை சொல்லும் இயக்குநராக அறியப்படும் முருகதாஸ், சல்மான்கானை முற்றிலும் புதிய கோணத்தில் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், இந்தியா முழுவதும் பெரும் அளவில் திரையிடப்பட்டது. விளம்பரங்களும், டீசர், டிரெய்லர்களும் படத்திற்கு நல்ல வரவேற்பை உருவாக்கின.
ஆனால், படம் வெளியான பிறகு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக திரைக்கதை, கதை ஓட்டம் மற்றும் சில காட்சிகளின் நீளம் ஆகியவை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சல்மான்கானின் நடிப்பு வழக்கம்போல் ரசிகர்களை கவர்ந்தாலும், முழுமையான திருப்தியை படம் அளிக்கவில்லை என பலர் கருத்து தெரிவித்தனர்.
இதன் காரணமாக ‘சிக்கந்தர்’ படம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
Listen News!