உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 2025 ஜனவரி மாதம் நடைபெற்ற மகா கும்பமேளா விழா மூலம் திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகி பிரபலமான இளம்பெண் மோனலிசா தற்போது தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் தொடர்பாக எழுந்த பல்வேறு விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
மகா கும்பமேளா விழாவில் பாசிமணி மற்றும் வளையல்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதன் மூலம் மோனலிசா திடீரென பிரபலமானார். அவரது எளிமையான தோற்றம் மற்றும் இயல்பான நடத்தை பலரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு சமூக ஊடகங்களில் அவருக்கு பெரும் ரசிகர் வட்டாரமும் உருவானது.

இந்த பிரபலத்தால் அவருக்கு பல்வேறு வாய்ப்புகளும் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள அருமனூர் கோவிலில் நேற்று மோனலிசா தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சி இந்து மரபு சடங்குகளின்படி நடைபெற்றது.
திருமணத்தின் பின்னர் இன்று மோனலிசா மற்றும் அவரது கணவர் பர்மான் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது திருமணம் குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மோனலிசா, “நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எங்களது திருமணம் இந்து முறையில் தான் நடைபெற்றது. ஆனால் இதை ‘லவ் ஜிஹாத்’ என்று கூறுவது சரியல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் எங்களது குடும்பத்தினரும் நெருங்கியவர்களும் முன்னிலையில் நடைபெற்றது,” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது கணவர் பர்மான் கானும் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “நாங்கள் இருவருமே எங்களது மதங்களை மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களது மதத்தை மதித்து வாழ்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!