இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து, உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை குறித்து பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்தியும் சில இடங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் அவசரமாக பெட்ரோல் பங்குகளுக்கு சென்று எரிபொருள் நிரப்ப முயன்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் ஸ்ரீமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட கூட்டம் மற்றும் மக்கள் காட்டிய அவசரம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன். அரைமணி நேரம் காத்திருந்த பிறகே பெட்ரோல் அடிக்க முடிந்தது. பைக் மற்றும் காருக்கு தனித்தனியாக வழிகள் அமைத்திருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகும் பெரிய அளவில் கூட்டம் இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாளை முதல் பெட்ரோல் கிடைக்காது என்று சிலர் கூறியதால் மக்கள் இன்று அதிகமாக பெட்ரோல் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தார்கள். வாழ்க்கை முழுவதும் அந்த வாகனம் ஓடப்போகிற மாதிரி பலர் கடன் வாங்கிக்கொண்டு கூட பெட்ரோல் அடிக்க வந்திருந்தார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் மக்கள் காட்டிய அவசரத்தை குறித்து அவர் ஆச்சரியம் தெரிவித்தார். “நான் பெட்ரோல் அடித்த சில நிமிடங்களிலேயே அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் முடிந்துவிட்டது என்று போர்டு வைத்துவிட்டார்கள். இதனால் பலர் எரிபொருள் கிடைக்காமல் திரும்பிச் சென்றார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். “நாம் ஏன் பகிர்ந்து வாழக் கூடாது? நம்மிடம் வசதி இருக்கிறது என்பதற்காக தேவையற்ற அளவுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொள்ள வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீமன் கூறிய இந்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
Listen News!