சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது திரைப்பயணத்தின் மிகவும் பிஸியான கட்டத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் அவர், ரசிகர்களுக்கு தொடர்ந்து சர்ப்ரைஸ்களை வழங்கி வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய பணிகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், தற்போது தனது 173-வது திரைப்படத்திற்காக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படம் ஆரம்பத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருப்பதாக கூறப்படுவது. தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு திட்டத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக முக்கிய வேடத்தில் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் கூட, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘தலைவர் 173’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான தொடக்க காட்சிகளை விட வித்தியாசமாக, ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடன அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஜெயிலர் 2 படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையாத நிலையில், 'தலைவர் 173' பற்றிய ஒவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரம்மாண்ட கூட்டணி திரையரங்குகளில் எந்த அளவுக்கு மாயாஜாலம் நிகழ்த்தப் போகிறது என்பதை காலமே பதில் சொல்லும்.
Listen News!