• Oct 16 2026

திருமணமானால் கவர்ச்சி காட்டக்கூடாதா.? விமர்சகர்களுக்கு ரகுல் பிரீத் சிங் கொடுத்த பதிலடி!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

திருமணத்துக்குப் பிறகு நடிகைகளின் திரைப்பயணம் குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், தமிழில் ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘என்.ஜி.கே.’,  ‘இந்தியன் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரது நடிப்பில் ‘இந்தியன் 3’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்திலும் சூர்ப்பனகையாக நடித்து வருகிறார்.

இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைத் திருமணம் செய்துகொண்ட பின்னரும், தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ரகுல் பிரீத் சிங், நடிகர்களுக்கு திருமணமானாலும் குழந்தைகள் பிறந்தாலும் கதாநாயகனாக நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. ஆனால், நடிகைகளுக்குத் திருமணமானதும் அவர்களது திரைப்பயணம் முடிந்துவிட்டதாகப் பேசத் தொடங்கிவிடுகின்றனர். குழந்தைகள் பிறந்துவிட்டால் அவர்களது மார்க்கெட் முடிந்துவிட்டதாகவும் விமர்சிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே என்றும், அது நடிகைகளின் திறமைக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், கவர்ச்சி என்பதும் நடிப்பின் ஒரு பரிமாணம் தான் என்றும், அதனைத் தவறாகப் பார்ப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளார். அதேவேளை, கவர்ச்சி எல்லைமீறிச் சென்றுவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தனது திரைப்பயணத்தில் தெளிவாக இருப்பதாகவும், விமர்சனங்கள் தன்னைப் பாதிக்காது என்றும் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

Advertisement

Advertisement