• Aug 05 2026

ஒரே பாடலுக்கு ரூ.1.5 கோடி? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய கீர்த்தி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், தற்போது தனது சினிமா பயணத்தில் புதிய முடிவொன்றை எடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தமிழில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தனது இயல்பான நடிப்பாலும், முகபாவனைகளாலும் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதன்பின்னர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது 'நடிகையர் திலகம்' திரைப்படம். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அவர், 2024 ஆம் ஆண்டு வெளியான 'பேபி ஜான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பு பயணத்தைத் தொடர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில், தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படம் தொடர்பான தகவல் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் நடனமாட ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை பெரும்பாலும் கதாநாயகி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது சிறப்பு பாடலுக்கு நடனமாட சம்மதித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஒரே பாடலுக்காக அவருக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் குறித்து படக்குழுவிடம் கேட்கப்பட்டபோது, கீர்த்தி சுரேஷ் அந்த பாடலில் நடனமாடுவது உண்மைதான். ஆனால் சம்பளம் தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.


'தி பாரடைஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீப காலமாக முன்னணி நடிகைகள் சிறப்பு பாடல்களில் நடனமாடுவது திரைப்பட உலகில் ஒரு புதிய போக்காக மாறியுள்ளது. 'புஷ்பா' திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய "ஊ சொல்றியா மாமா" பாடல் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 அதேபோல் தமன்னாவின் "காவாலா" பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது. அண்மையில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தில் நடிகை சுருதி ஹாசனும் ஒரு சிறப்பு பாடலில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷும் இந்த வரிசையில் இணைந்திருப்பது திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவர் நடனமாடும் அந்தப் பாடல் வெளியாகும் வரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement