• Aug 04 2026

ரேசிங் வீரராக அஜித்... உலக அரங்கில் ஒலிக்கும் ‘கிளாடியேட்டர்ஸ்’! வெளியான போஸ்டர்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் அஜித் குமார், நடிப்பில் மட்டுமல்லாமல் சர்வதேச கார் பந்தய உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 

தற்போது அவரது ரேசிங் பயணத்தை பதிவு செய்யும் ‘Gladiators – In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், அதன்பின்னர் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பல வெற்றிப் படங்களை வழங்கிய அவர், திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்ததோடு, கார் பந்தயத்தின் மீதான தனது ஆர்வத்தையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.


குறிப்பாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, மோட்டார் ஸ்போர்ட்ஸில் முழு கவனம் செலுத்தத் தொடங்கிய அஜித், ‘Ajith Kumar Racing’ என்ற தனது சொந்த பந்தய அணியைத் தொடங்கி சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது வெற்றிகள் இந்திய ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளன.

இதற்கிடையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் திரை வாழ்க்கையை அல்ல, அவரது ரேசிங் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Gladiators – In Pursuit of Challenges’ ஆவணப்படம் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த 90 நிமிட ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற Asian Le Mans மற்றும் 24H Series போன்ற சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்ற தருணங்கள் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்கள், விபத்துகள், பின்னடைவுகள், மீண்டு வந்த விதம் மற்றும் 2025 துபாய் 24H போட்டியில் போடியம் வெற்றியைப் பெற்ற வரலாற்று தருணம் வரை அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தியாவின் முன்னணி பார்முலா–1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ரேசர் ஆதித்யா படேல், சர்வதேச வர்ணனையாளர் ஜூலியன் கெர்பி உள்ளிட்ட பலரும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் அஜித்தின் பயணம் ரசிகர்களுக்கு விரிவாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சமீபத்தில் வெளியான டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ரேசிங் உடையில் கம்பீரமாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

திரை உலகில் வெற்றிநாயகனாகவும், பந்தயக் களத்தில் சவால்களை வென்று சாதனை படைக்கும் வீரராகவும் திகழும் அஜித்தின் வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்யும் இந்த ஆவணப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களும் ‘கிளாடியேட்டர்ஸ்’ வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement