சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் அதிரடியான நடிப்பும், மாஸான காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, படத்தில் இடம்பெறும் ‘வைல்ட் வைல்ட் ஃபயர்’ காட்சி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில், “தலைவர் ‘வைல்ட் வைல்ட் ஃபயர்’ மூலம் திரையை அதிர வைத்தார். கண்ணை இமைக்காமல் அவரைப் பார்த்தேன். லவ் யூ தலைவா! மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓவர்லோடட் மாஸ் பிளாஸ்ட் ஜெயிலர்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இயக்குநர் நெல்சனின் எழுத்தும் இயக்கமும், இசையமைப்பாளர் அனிருத்தின் அதிரடியான இசையும் ஒவ்வொரு காட்சியையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மிதுன் சக்கரவர்த்தி, மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஒரே திரைப்படத்தில் இடம்பெறுவது அற்புதமான தருணம் என்றும் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்தப் பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!