தமிழ் திரையுலகில் நட்பும் மரியாதையும் கலந்த உறவுகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில், நடிகர் விஜய் குறித்து நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. விஜயுடன் தனக்கு இருக்கும் பந்தம், மரியாதை மற்றும் ஆதரவை மனதார வெளிப்படுத்தியுள்ளார் ஜீவா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜீவா, நடிகர் விஜயை குறித்து உருக்கமாக பேசினார். அதில், “விஜய் அண்ணாவின் படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன். ‘நண்பன்’ படத்திலயும் அவர் கூட நடிச்சிருக்கேன். அதுவும் ஒரு பொங்கல் ரிலீஸ் தான்.”எனக் கூறிய ஜீவா, விஜயுடன் நடித்த அனுபவம் தன்னுடைய திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்,“14 வருசத்துக்கு அப்புறம் அண்ணனுக்காக ஒரு தம்பியாக என் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியிருக்கோம். படத்துல கூட ‘Thanks நண்பன்’ன்னு சொல்லியிருக்கிறது விஜய் அண்ணாவுக்குத் தான்.”என்று தெரிவித்தார்.
இதன் மூலம், தனது புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படத்தில் இடம்பெறும் அந்த குறிப்பிட்ட வசனம், விஜயை நினைவுகூர்ந்து வைத்தது என்பதையும் ஜீவா வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயுடன் தனக்கு இருக்கும் உறவைப் பற்றி மேலும் பேசிய ஜீவா,“எனக்கும் அவருக்கும் இருக்கும் பந்தத்தை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருக்கு எங்க ஆதரவு எப்பவும் இருக்கும். இது அண்ணன் பொங்கலாக இல்லாமல், தம்பி பொங்கலாகத் தான் இதை நாங்க பார்க்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.
இந்த கருத்துகள், சமீப காலமாக விஜயைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், ஜீவாவின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!