தமிழ் திரைப்படத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக சமூக மற்றும் சாதி சார்ந்த அரசியல் விவாதங்கள் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், அவர்களின் போராட்டங்கள் மற்றும் சமூக அநீதிகளை மையமாக வைத்து பல இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

இந்த வரிசையில், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் வலிகள், அவர்களின் வாழ்க்கை யதார்த்தங்கள் ஆகியவற்றை தங்களது படங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று, சமூக மாற்றம் குறித்த விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளன.
அதே நேரத்தில், இயக்குநர் மோகன் ஜி இயக்கிய திரைப்படங்கள், சாதியை வேறு கோணத்தில் சித்தரிப்பதாகவும், சாதிய உணர்வுகளை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் ஒரு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ‘திரௌபதி’ போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில், இயக்குநர் மோகன் ஜி சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில், சாதி குறித்த தனது பார்வையை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய மோகன் ஜி, “உண்மையிலேயே ஜாதி இருக்கான்னு கேட்டா இருக்கு. இதை நானே மட்டும் சொல்லல. வெற்றிமாறன் சார் கூட இதைத்தான் சொன்னாரு. ‘ஜாதி இருக்கு… ஆனா எனக்கு அது வேணாம்னு சொல்லிட்டாரு. அவர் ஜெயிச்சுட்டாரு. அதனால அவருக்கு அது தேவைப்படல’ என்று கூறினார்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ஆனால் அடித்தட்டில் இருக்கும் மக்கள் மேலே ஏறி வர, இப்பவும் இட ஒதுக்கீடு தேவைப்படுது. இந்த விஷயத்தைத் தான் நானும் என் படங்களிலும் பேச்சுகளிலும் சொல்றேன். ஆனா நான் சொன்னா என்னை திட்டுறாங்க. அதே விஷயத்தை வெற்றிமாறன் சார் சொன்னா பாராட்டுறாங்க. இங்க பிரச்சனை என்னன்னா, என்ன சொல்றாங்கன்னு இல்ல… யாரு சொல்றாங்க அப்படிங்கிறது தான். அவ்வளவு தான் வித்தியாசம்,” என்று கூறியுள்ளார்.
மோகன் ஜியின் இந்த கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பி வைரலாகி வருகின்றது.
Listen News!