• Jan 30 2026

மாநகரம் முதல் கார்கி வரையிலான திரைப்பட விருதுகள்.! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 2016 முதல் 2022ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த விருதுகள், தற்போது ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திரையுலகில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த விருதுகள் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் வெளிவந்த தரமான திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பங்களிப்புகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமூக கருத்துகள், கலைநயம், தொழில்நுட்பத் திறன் ஆகிய அடிப்படைகளில் இந்த விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியாக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்த பட்டியலில் மாநகரம், அறம் , பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்களாகவும்  இடம்பிடித்துள்ளன.

மேலும்  வடசென்னை படத்துக்காக தனுஷும், சூரரை போற்று படத்துக்காக சூர்யாவும், புரியாத புதிர் படத்துக்காக விஜய் சேதுபதியும், தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்காக கார்த்தியும், சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யாவும், டாணாக்காரன் படத்துக்காக விக்ரம் பிரபுவும், ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபனும் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாம்பு சட்டை படத்துக்காக கீர்த்தி சுரேஷும், அறம் படத்துக்காக நயன்தாராவும், செக்கச் சிவந்த வானம் படத்துக்காக ஜோதிகாவும், அசுரன் படத்துக்காக மஞ்சு வாரியரும், சூரரை போற்று படத்துக்காக அபர்ணா பாலமுரளியும், ஜெய் பீம் படத்துக்காக லிஜோ மோல் ஜோசும், கார்கி படத்துக்காக சாய் பல்லவியும் சிறந்த நடிகைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநர்களுக்கான விருதை லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா), மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்), ஆர்.பார்த்திபன் (ஒத்த செருப்பு), சுதா கொங்கரா (சூரரைப் போற்று), செ.ஞானவேல் (ஜெய்பீம்), கெளதம் ராமச்சந்திரன் (கார்கி) ஆகியோர் வென்றுள்ளனர்.

இந்த விருதுகள் வழங்கும் விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படுவதால், இந்த விழா தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement