எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துடன் ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகளால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, ஜனநாயகன் திரைப்படத்திற்கு சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறி, தணிக்கை வாரியம் யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியது. இதனை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், பாதுகாப்புப் படைகளை எதிர்மறையாக சித்தரிப்பதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் கூறி, ஜனவரி 5ஆம் தேதி படத்தை திருத்தக் குழுவுக்கு தணிக்கை வாரியம் அனுப்பியது. இதனால் படத்தின் வெளியீடு தாமதமடைந்தது.
சுமார் ரூ.500 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட வேண்டும் என்பதால், தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9ஆம் தேதி இரண்டு வாரங்களுக்குள் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவுக்கு தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினாலும், வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திலேயே தொடர அறிவுறுத்தப்பட்டது. இதனால் பட வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவது படத்தின் வெளியீட்டை மேலும் பின்னுக்குத் தள்ளும் என்பதால், வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வழக்கிற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு குழுவை அணுகினால், 10 முதல் 20 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தயாரிப்புத் தரப்புக்கு உள்ளது.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள், “சட்டப் போராட்டத்தைத் தவிர்த்து, தணிக்கை வாரிய நடைமுறைகளை பின்பற்றி படத்தை விரைவில் வெளியிடுங்கள்” என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே, சட்டப் போராட்டத்தைக் கைவிடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!